;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

0

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(12.06.2025) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்படும் 2ஆம் காலாண்டுக்குரிய கூட்டமாக இது அமையும் எனவும் தெரிவித்ததுடன், இக் கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலமாக அதிக ஒலி எழுப்புதலை வரையறுத்தல், திண்மக் கழிவகற்றல் பிரச்சினைகள் மற்றும் தற்போது கரையொதுங்கிவரும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டப்பட்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹாலிங்க ஜெயசிங்க அவர்களும் கலந்துகொண்டார்.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது ஒலிபெருக்கி மூலமான ஒலி வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத்தலங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் ஒலிபெருக்கிகள் குறித்த எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இதனை மீறும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இதே வேளை வழிபாட்டுத் தலங்களில் நிரந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகள் மூலம் இடையூறு ஏற்படும் பட்டத்தில் அவை தொடர்பாக வழிபாட்டுத் தல நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் போது பொதுமக்கள் அது தொடர்பாக மாவட்டச் செயலக 0212225000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை முன்வைப்பதனூடாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை எந்நேரமும் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

3.திண்மக் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை மிக இறுக்கமாக பின்பற்றுமாறும் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கமைவாக முதற்கட்டமாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டு இத் திட்டம் இறுக்கமாக பின்பற்றப்படும் என்று உள்ளூராட்சி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது.

4.தற்போது புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் பெருமளவில் கரையொதுங்கி வருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும், இக் கூட்டத்தில் ஆலயங்களினால் கோரப்பட்ட மண் தொடர்பாகவும், நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பொலிஸ் அத்தியகட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள்,, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரி, யாழ் மாநகர சபை பிரதி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , யாழ்ப்பாணம் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.