;
Athirady Tamil News

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் – 06 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை

0

வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம்.

நாம் வெளியேறினதும், எமது பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயம் என இலங்கை இராணுவம் அறிவித்துக் கையகப்படுத்திக்கொண்டது.

அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாம் பல இடங்களில் குடியேறி உள்நாட்டுக்குள்ளையே அகதிகளாக வாழ்கின்றோம்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் – இடம்பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கவேண்டும் என்றும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதிலும், அவை இன்னமும் இராணுத்தால் விடுவிக்கப்படவில்லை.

இடையிடையே சில பிரதேசங்களில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டபோதும், இன்னமும் பெரும் நிலப்பரப்பு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு – வளம்மிக்க அந்தப் பிரதேசத்தின் பயன்கள் இராணுவத்தால் சுரண்டப்பட்டு வருகின்றது.

வலிகாமம் வடக்கில் இன்னமும் 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்தாலும், அந்தப் பிரதேசத்தின் வளங்களைச் சுரண்டி வருமானம் ஈட்டுவதிலேயே இராணுவம் முனைப்பாக இருக்கின்றது.

தற்போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளில் 50 சதவீதமானவற்றில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும், பண்ணைகளை யும் முன்னெடுக்கின்றனர்.

10 சதவீதமான காணிகளில் மைதானங்கள், வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்பன இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறப்படும் விவசாய அறுவடையையும், அவற்றின் ஊடான வருமானத்தையும் இராணுவமே பெற்றுக்கொண்டுவருகின்றது.

அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தையிட்டிப் பகுதியில் விடுவிக்கத் தயாராகவிருந்த பெண்கள் விடுதி ஒன்றில் தற்போது இராணுவத்தினால் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், இராணுவத்தினர் பிரதேச செயலகங்களிடமோ அல்லது உரிய அரச நிர்வாகங்களிலோ எந்தவித அனுமதியும் பெறாது கட்டுமானங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று காங்கேசன்துறையில் தல்செவன விடுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி, அங்குள்ள சில வீதிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மறைமுகமாக இராணுவத்தின் ஆளுகை தற்போதும் தொடர்கின்றது.

வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போதும் பல்வேறு இடங்களில் இடர்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அவர்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடிகளுடன் தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துகின்றனர்.

பாடசாலைகள், பாடசாலை மைதானங்கள், ஆலயங்கள், மயானங்கள் எனப் பலவும் இன்னமும் இராணுவத்தின் வசமே இருக்கின்றது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.