;
Athirady Tamil News

கிருஷ்ணகிரி அருகே பஸ் கவிழ்ந்து விபத்து – 34 பேர் காயம்

0

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தினமும் நிறுவன பஸ்சில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சியில் இருந்து அந்த தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு நிறுவன பஸ் நேற்று காலை புறப்பட்டது.

பஸ்சை திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனூர் அருகே உள்ள மங்களப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில் 53 பேர் இருந்தனர். அந்த பஸ் குனிச்சியில் புறப்பட்டு, மாடரஅள்ளி, கன்னண்டஅள்ளி வழியாக திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பெரியபனமுட்லு பக்கமாக வந்து கொண்டிருந்தது.

அந்த நேரம் பஸ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு வேன் மீது தனியார் நிறுவன பஸ் உரசி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 34 பணியாளர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலை அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதே போல கந்திகுப்பம் போலீசாரும் விரைந்து சென்றனர்.இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.