;
Athirady Tamil News

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

0

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில் நேபாள நாட்டில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது.

சிறுமிகளைத் தேவியின் அவதாரமாக் கருதிப் போற்றி வழிபடும் கோயில் தான் தலேஜு பவானி திருக்கோயில். நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இத்திருக்கோயிலில் குமாரி பூஜை மிகவும் விசேஷம். அங்குள்ள நேவாரி பெண்கள் பவானி கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சடங்குகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர்.

நேபாளத்தின் குமாரி என்றழைக்கப்படும் இந்தச் சிறுமியைத் தேர்வு செய்வதில் பலதரப்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர். அனைத்து தேர்விலும் வெற்றிபெறும் சிறுமிக்கு முன்பாக இறுதியான தேர்வாக ஒரு எருமை பலியிடப்படும். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த நேபாள குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார். இவ்வாறு தேர்வாகும் சிறுமி அங்குள்ள மன்னர் அரண்மணையில் தங்கவைக்கப்படுவார்.

அந்தச் சிறுமி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார். மேலும் சிறுமியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

இதற்கு முன்னதாக இருந்த 11 வயதுடைய சிறுமி த்ரிஷ்னா ஷக்யா தனது குடும்பத்தினருடன் பின்புற வாயலில் அனுப்பிவைக்கப்பட்டார். இவர் கடந்த 2017ல் தெய்வ சிறுமியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குமாரி தெய்வம் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாடுவதால் நேபாளத்தில் உள்ள பள்ளி, அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஆர்யதாரா ஷக்யா 2 வயது சிறுமி கன்னி தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பருவமடையும் வரை அந்தச் சிறுமி இந்தப் பதவியில் இருப்பார்.

கடந்த 2008-ம் ஆண்டுடன் அங்கிருந்த ஹிந்து சாம்ராஜ்ஜிய அரசவை முறை கலைக்கப்பட்டது. இருப்பினும் இந்த சடங்குகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

குமாரி நடைமுறை காரணமாக சிறுமிகளின் இளமைப் பருவம் வீணடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பூப்படைந்த பின் விடுவிக்கப்பட்டு வெளி உலகில் வரும் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தேர்வான குமாரிகள் தெரிவித்தனர்.

எனவே, குமாரிகளாக தேர்வாகும் சிறுமிகளுக்கு கல்வி அவசியம் என 2008-ல் நேபாள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக தேர்வான குமாரிகள் படிக்கவும், அரண்மனையில் இருந்தே தேர்வு எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரிகளுக்கு, மாதாந்திர ஓய்வூதியமாக ஒரு சிறிய தொகையை அரசு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.