;
Athirady Tamil News

உலக குடியிருப்பு தினம் – 2025

0

உலக குடியிருப்பு தினம் (World Habitat Day) இன்றைய தினம் (03.10.2025) பிரதம விருந்தினராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணாநாதன் இளங்குமரன் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் டி. எல். டீபானி பிரியங்கா மற்றும் பிரதி திட்டப்பணிப்பாளர் பிரியங்கா செனிவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றியாற்றிய அரசாங்க அதிபர், இன்றைய நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரையும் வரவேற்றதுடன், ஒக்டோபர் 06 ஆம் தினம் உலக குடியிருப்பு தினத்தினை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து மாவட்டச் செயலகம் இந் நிகழ்வினை நடாத்திவருவதாகவும், அரசாங்கமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருவதற்கு அமைய மேற்படி அமைச்சு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும், கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களின் சிபார்சுக்கு அமைய, அமைச்சரவையினால் 10 இலட்சம் பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 06 பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 09 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 620 வீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்து இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைப்பதாகவும், அந்தவகையில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது போக்குவரத்து செலவு அதிகமாகவுள்ளதாகவும், அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆதலால் கடல் போக்குவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டு தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு கெளரவ அமைச்சர் அவர்கள் ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தமதுரையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாகவிருந்ததாகவும், தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை எனவும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, விசேடமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் செயற்றிட்டம் உள்ளதால், மேலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், வீதி, குளங்கள் இறங்குதுறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் துரித அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும், நாளைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும், அதற்கு போக்குவரத்து நெடுச்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்தி, பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்தல் மற்றும் முதலீட்டு வலயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். போதைப் பொருள் மற்றும் வாள்வெட்டுஆகியவற்றை முற்றாக ஓழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறிவருவதாகவும், டொலரின் பெறுமதி சீராகவுள்ளதாகவும் கெளரவ அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினைபெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் அமைச்சின் பிரதி திட்டப் பணிப்பாளர் பிரியங்கா செனவிரத்தின, மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், மீள்குடியேற்ற கிளை மற்றும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வீடமைப்பு திட்ட விடய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.