ஊழியர் நிதிகளில் பெரிய மாற்றம்? அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) 25 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அங்கத்தவர்களாக உள்ளதுடன், அதன் சொத்து பெறுமதி 4.9 ட்ரில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக காணப்படுகிறது.
EPF நிதியின் பொறுப்பு, முதலீட்டு முகாமைத்துவம், நிதி நிர்வாகம் மற்றும் அங்கத்தவர்களுக்கான நன்மைகளை வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மத்திய வங்கியின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேவேளை, தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களைப் பதிவு செய்தல், சட்ட இணக்கங்களை வலுப்படுத்தல், நிலுவைத் தொகைகளை அறவிடுதல் மற்றும் ஊழியர் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பொறுப்புகள் தொழில் திணைக்களத்திடம் உள்ளன.
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ETF நிதியில் தற்போது 30 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன் சொத்து பெறுமதி 637.5 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக உள்ளது. ETF நிதி, தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட முத்தரப்புப் பேரவை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சமூகப் பாதுகாப்பு நிதிகளை முத்தரப்பு நிர்வாக முறையின் கீழ் கொண்டு செல்வது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறையாகும் எனவும், இது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஊக்குவிக்கப்படும் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, EPF மற்றும் ETF ஆகிய இரு நிதியங்களின் அங்கத்தவர்களின் சொத்துக்களுக்கு சட்ட ரீதியான மற்றும் நிதி ரீதியான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
நியமிக்கப்படவுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் குழு, சர்வதேச சிறந்த நடைமுறைகளை கருத்தில் கொண்டு, இரு நிதியங்களின் செயற்பாடுகளையும் ஒருங்கிணைந்த முத்தரப்பு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.