2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (16.06.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ரூபா 02.00 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில் இன்றைய தினம் 125 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூபா 400,000.00 வீதம் காசோலை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.