வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!
வங்கதேசத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியது முதல் 2,960 டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் பதிவான டெங்கு காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 72,822 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலானது பெரும்பாலும் பருவமழை காலங்களில் (ஜூன் – செப்டம்பர்) மட்டுமே அதிகளவில் கண்டறியப்பட்டு வந்தன. ஆனால், நிகழாண்டில் (2025) ஜூன் மாதத்திற்கு முன்பே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் டெங்கு காய்ச்சலால் புதியதாக 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.