;
Athirady Tamil News

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது

0

பாலஸ்தீன கைதி ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய வன்முறை விடியோ கசிந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு இஸ்ரேலின், எஸ்டி டீமன் ராணுவத் தளத்தின் சிறையில், பாலஸ்தீன கைதி ஒருவரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யும் விடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், தாக்குதலுக்கு ஆளான பாலஸ்தீனர் கடுமையான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் அவர் காஸாவுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 11 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென இஸ்ரேலின் வலதுசாரி அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறையில் இருந்து விடியோ கசிந்தது தொடர்பாக கடந்த வாரம், இஸ்ரேல் அதிகாரிகள் குற்ற விசாரணையைத் தொடங்கினர்.

இந்த விசாரணை நடைபெற்றபோது, இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி விடுமுறையில் சென்றுள்ளார்.

மேலும், அவர் மீண்டும் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படமாட்டார் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தனது பதவியை ராஜிநாமா செய்த மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி சிறையில் இருந்து விடியோ கசிந்த சம்பவத்துக்கு தான் முழுவதுமாகப் பொறுப்பேற்பதாக, அவரது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இத்துடன், கடந்த நவ.2 ஆம் தேதி ஜெனரல் யிஃபாத் மாயமானதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் பரவின. பின்னர், பல மணிநேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் மூலம், அவர் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.