;
Athirady Tamil News

மண்ணுக்குள் புதைந்த சோதனைச் சாவடி; சிக்குண்ட இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

0

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது.

அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துல்ஹிரிய – மொன்ரோவியா பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக அறியப்படுகின்றது.

அத்தோடு வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

அவர்கள் மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதற்கு மேலே இருந்த மண்மேடு மரம் ஒன்றுடன் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் காட்சிகள் ஒருவரது கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. அவ்விடத்தில் இருந்த லொறி ஒன்றின் சாரதி தற்போது காணாமல் போயுள்ளார்.

மண் மேட்டில் சிக்கியிருந்த ஒரு ஊழியர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.