80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!
ஆப்கானிஸ்தானில் தன் குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த குற்றவாளியை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. அந்தவகையில் அங்கு மிகக் கொடூர குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில் 9 குழந்தைகள், பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை மங்கள் கான் என்பவர் கொலை செய்துள்ளார். அவரை குற்றவாளி என உறுதி செய்த அந்த நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது.
அதன்படி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஆப்கனில் கோஸ்ட் நகரத்தில் உள்ள ஸ்டேடியத்தில் குற்றவாளி மங்கள் கானுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொதுமக்கள் என 80,000 பேர் திரண்ட நிலையில் அவர்கள் முன்பு குற்றவாளி மங்கள் கான் துப்பாக்கியால் 5 முறை சுடப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
மங்கள் கானுக்கு மன்னிப்பு வழங்குகிறீர்களா? என ஆப்கன் நீதிமன்றம் கேட்டதற்கு, அந்த குடும்பத்தினர் மன்னிப்பு வழங்க மறுத்து, மரண தண்டனை வழங்கச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே அவருக்கு மரண தண்டனையும் துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தலிபான் அரசு பதவியேற்ற பிறகு நடக்கும் 11 ஆவது மரண தண்டனை இதுவாகும். ஆப்கனில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஐ.நா. ஏற்கெனவே கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.