நல்லூர் பிரதேச சபை திண்மகழிவு முகாமைத்துவத்தினை அடுத்த ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை
நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்க வேளை 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களும்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 3 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதீட்டை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பாதீடானது வருமான மூலங்களினை அதிகரித்து அவ் வருமான மூலங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களை மிகைப்படுத்தப்பட்ட நிர்வாகச் செலவுகளுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்கும் பயன்படுத்தாமல் மக்களின் நலநோன்பிற்கு மட்டும் முன்னுரிமை வழங்கி பயன்படுத்த வேண்டும்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு என்றுமில்லாதவாறு பல சவால்கைளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட போதும் அதையும் தாண்டி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட் பட்ட பிரதேசத்தின் உட்காட்டுமான மேம்பாடுக்காகவும் அப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை யும் இயலுமானவரை பூர்த்தி செய்யும் வகையில் இப் பாதீடு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு சபைக்கு கிடைக்குமென எதிர்பாக்கப்படும் மொத்த வருமானமானது 450.537 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது. அதில் 363.648 மில்லியன் ரூபா சபையின் சுயவருமானம். 2025 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகும்.
2026 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானத்தில் அதிக பங்களிப்புச் செய்கின்ற வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் 2026 ஆம் ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் 369.648 மில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகவும் அதில் 93.2 வீதமாகிய 250.833 மில்லியன் ரூபா 3வது காலாண்டிலேயே சபைக்கு வருமானமாக கிடைத்துள்ள நிலையிலும் 2026ஆம் ஆண்டு வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் மூலம் அதிக வருமானம் சபைக்கு கிடைக்கும் என்பதாலும் 2026 ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் என எதிர்பாக்கப்படும் 369.648மில்லியன் ரூபா சாத்தியமானதாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான சபையின் பாதீட்டில் மொத்த செலவீனமாக 450.535 மில்லியன் ரூபா காணப்படுகின்றது
கடந்த காலங்களில் எமது சபையில் பணிபுரிகின்ற அனைத்து நிரந்தப் பணியாளர்களுக்குமான கொடுப்பனவினை மத்திய அரசாங்கம் அரசிறை வருமானமாக முழுமையாக வழங்கி வந்த நிலையில் இவ்வாண்டு முதல் இப் பணியாளர்களுக்கான மொத்தக் கொடுப்பனவில் 40 வீதத்தினை நாம் செலுத்த வேண்டும் என்ற அரச சுற்றிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சபைக்கு கிடைத்த 117.79 மில்லியன் ரூபா அரசிறை மானியம் 2026 ஆம் ஆண்டு 86.77 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டடுள்ளது.
அவ்வகையில் பணிபுரிகின்ற நிரந்தரப் பணியாளர்களின் கொடுப்பனவு மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தினால் உயர்த் தப்பட்ட சம்பள அதிகரிப்பு உட்பட அப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய மொத்த கொடுப்பனவுத் தொகையின் 40 வீதம் நல்லூர் பிரதேச சபையின் சுயவருமானத்திலிருந்து ஒதுக்கப் பட்டுள்ளது.
குறித்த ஒதுக்கீடு எமது மக்களுக்கு சென்றடையக்கூடிய மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடுகளில் கணிசமான செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும் மக்களின் நலநோன்புக்கு முன்னுரிமை வழங்கியே இப் பாதீடு தயாரிக்கப்பட்டுள்து. அதன் பிரகாரம் வீதிகளைப் புனரமைத்தல், வடிகாலமைப்பு, வீதி மின்விளக்குகள், நகர அபிவிருத்தி, மயானங்களைப் புனரமைத்தல், வீதிகளுக்கு பெயர்பலகையிடுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல் என நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு 162 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது சபையின் சுய வருமானத்தின் 44.55 வீதமாகும்.
அதே போல் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுச் செயற்றிட்டங்களான சத்துணவு வழங்குதல் புலமை பரிசில் நன்கொடை விசேட தேவையுள்ளோர் நல நோன்பு தாய் சேய் பராமரிப்பு வாழ்வாதார உதவி என்பவற்றுக்காக 12 மில்லியன் ரூபாவும் முன்பள்ளி அபிவிருத்தி மற்றும் சனசமூக நிலைய நன்கொடை ஆகியவற்றுக்கு 3.4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது
நல்லூர் பிரதேச சபையில் காணப்படும் 12 வட்டாரங்களின் அபிவிருத்திக்கும் 10 மில்லியன் ரூபா வீதம் 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் அவ் அவ் வட்டார உறுப்பினர்களினால் வழங்கப்படும் செயற்றிட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த வட்டார அபிவிருத்தி நிதியிலிருந்து அவ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும்
நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கழிவகற்ற பொறிமுறை யினை வினைத்திறனான மாற்றும் வகையில் கழிவுப்பொருட்கள் மீள் சுழற்சி மையங்கள் மேம்படுத்தப்பட்டு அவற்றுக்கு தேவையான மீள்சுழற்சி இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலினை பாதுகாத்தல் மர நடுகை செய்தல் போதை பொருள் ஒழிப்பு போன்ற செயற்றிட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்