;
Athirady Tamil News

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்… அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

0

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள்கள் புழக்கத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறி வெனிசுவேலா அதிபரை கடத்திச் செல்வதற்காக தலைநகர் கராகாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 24 பேர் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி நள்ளிரவு திடீர் தாக்குதலைத் தொடர்ந்தது.

இதில் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் கைது செய்யப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்க நீதித் துறை முன்பு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதலே அமெரிக்க நீதித் துறை போதைப் பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் மேலும் பதிவிட்டுள்ளதாவது, வெனிசுவேலாவிலிருந்து பெறப்பட்டுள்ள 50 மில்லியன் பேரல் வரையிலான கச்சா எண்ணெய், கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் துறைமுகங்களிலுள்ள கப்பல்களில் இறக்குமதி செய்யப்படும். பண மதிப்புகள் என்னால் நிர்வகிக்கப்படும். அதன் பலன்கள் அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா மக்களுக்கு பயன்படுத்தப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.