கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பீதி!
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தில் இறந்துகிடந்த காகங்களிடம் ஹெச்.5.என்.1 வைரஸ் உறுதியாகி இருப்பதால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இரிட்டி தாலுகா எடக்கானம் பகுதியில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்தன. அதில் ஒரு காகத்தின் உடலில் பறவை காய்ச்சலுக்கான ஹெச்.5.என்.1 வைரஸ் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கோழிகளிடம் பறவை காய்ச்சல் பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இல்லையென தெரிய வந்துள்ளது. இதனால் கோழிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்ல வேண்டிய அவசியம் எழவில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், இரிட்டி தாலுகாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி மாவட்ட மருத்துவ அதிகாரி, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
உயிரிழந்த பறவைகளின் உடல்கள் கீழே கிடக்கும்பட்சத்தில், உரிய முன்னெச்சரிக்கையுடன் அவற்றின் மீது கால்சியம் காா்போனைட் தெளித்து, ஆழமாக குழிதோண்டி புதைத்துவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரிட்டி தாலுகாவில் வாழும் பொதுமக்கள் யாருக்கும் மா்ம காய்ச்சல் அல்லது சுவாசத் தொற்று உள்ளதா என உன்னிப்பாக கவனிக்கும்படி, மருத்துவ அதிகாரிகளுக்கு மாநில அரசு சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.