கல்முனை நகர அபிவிருத்தி தேவைகளை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்
கல்முனை நகரம் வேண்டி நிற்கும் அவசர அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடி தலையீட்டினை கோரி கல்முனை சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகர மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பொது வசதிகள் இன்றியும் கடந்த பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க அபிவிருத்தி எதுவும் காணாமலும் இருந்து வரும் துர்ப்பாக்கிய நிலை குறித்து கல்முனை KDMC அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.ஆதம்பாவா ஆகியோருடன் கல்முனையில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள், கல்முனை நகர வர்த்தக சங்க பிரதிநிதிகள், கல்முனை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சந்திப்பில் கலந்துகொண்ட கல்முனை சிவில் சமூக பிரதிநிதிகள், கல்முனை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எவ்வித குறிப்பிடத்தக்க அபிவிருத்தியும் அடையாமல் இருந்து வரும் நிலை, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பாக இருக்கும் பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய நிறுவனங்களிற்கு ஒழுங்கான அலுவலக கட்டிட வசதி கூட இல்லாத பிரச்சினை, போதியளவு வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக, திண்மக் கழிவுகள் மற்றும் மலசலகூட கழிவுநீர் என்பவற்றை அகற்றி நிர்வகிப்பதில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கும் சவால்கள், கல்முனை நகரத்திற்குள் ஒரு முக்கியமான போக்குவரத்து பாதையாக செயல்படும் கல்முனை கடற்கரை வீதி, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிகரித்த போக்குவரத்து காரணமாக கடுமையான நெரிசலாக மாறியுள்ள நிலையில் அதனை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ள பிரச்சினை, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ள பொது நூலகம் மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிரச்சினை மற்றும் கல்முனை மாநகர பொதுச் சந்தை மிக நீண்ட காலமாக அபிவிருத்தி இன்றி மிக மோசமான ஆபத்தான நிலையில் உள்ள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் முன்வைத்து விளக்கிக் கூறி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இறுதியாக, கௌரவ பிரதியமைச்சர் அவர்கள் மேற்குறித்த பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் மற்றும் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
