;
Athirady Tamil News

யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்

0

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் நாட்டை விட்டு படகுகள் மூலம் இந்தியாவிற்கு தப்பி சென்று இருந்தனர்.

இந்தியாவில் கைது.

அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தேவா , பிரகாஷ் மற்றும் டானியல் ஆகிய மூவர் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடிய குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளில் தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் தேடப்படும் நபர்கள் என தெரியவந்தது. அவர்களுடன் கைதான டானியல் என்பவர் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து , திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

யாழில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் கொலை குற்றத்தில் தேடப்படும் நபர்களை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் இலங்கை கோரி வந்தது.

கொட்டாஞ்சேனை கொலைக்கு பங்களித்த யாழ். வாசிகள்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி கொழும்பு கொட்டாச்சேனை பகுதியில் வைத்து பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த புகுடு கண்ணா என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை குற்றவாளிகள் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியா தப்பி செல்ல திட்டமிட்டுள்ளமை தெரிய வந்ததை அடுத்து , யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலையில் , கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொலை சந்தேகநபர்கள் மானிப்பாய் பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்ததை தடயறி கருவி (GPS) ஊடாக கண்காணித்து காரை மடக்கி அதில் பயணித்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவர்களுக்கு உதவியுள்ளமை தெரியவந்துள்ளது.

உதவி புரிந்தவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , நவம்பர் 11ஆம் திகதி குறித்த நபர் கார் ஒன்றில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளை கடத்தி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். குறித்த காரின் இலக்க தகடு போலி என்பதும் தெரியவந்தது.

வத்தளை நபருக்கு துப்பாக்கி கையளித்த யாழ். வாசி.

அதேவேளை நவம்பர் மாதம் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் காரில் துப்பாக்கி ஒன்றினை எடுத்து சென்று வத்தளையில் உள்ள நபரிடம் கையளிக்க முயன்ற வேளை வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் வளர்ந்த நட்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் உள்ள நபர்களும் இடையிலான தொடர்புகள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , கொழும்பில் இடம்பெற்ற கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்ற நிலையில் , தமிழகத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , திருச்சி முகாமில் ஏற்பட்ட நட்பு ஊடாகவே யாழ்ப்பாணம் – கொழும்புக்கு வன்முறை கும்பல்களுக்கு தொடர்பு ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

நாடு கடத்தல்

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவா மற்றும் பிரகாஷ் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிய நிலையில் , இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பிரான்ஸ்க்கு தப்பிய சன்னா

அதேவேளை குறித்த நபர்களுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய சன்னா என அழைக்கப்படும் நாகலிங்கம் பிரசன்னா என்பவர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி பாரீஸ் நகருக்கு அண்மித்த பகுதியில் பாலகிருஷ்ணன் அபிராமன் எனும் இளைஞனை படுகொலை செய்த குற்றத்தில் பிரான்ஸ் பொலிஸாரினால் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 2021ஆம் ஆண்டு சிவகுமாரன் ஜீவரத்னா என்பவரை கொலை செய்தமை தொடர்பிலான குற்றத்தில் தேடப்பட்ட நிலையிலையே நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார்.

கனடாவில் கைதான சன்னா

அந்நிலையில் , கனடா நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரின் கைரேகைகளை கனேடியன் பொலிஸார் பெற்று சோதனையிட்ட வேளை அவரது குற்ற பின்னணிகள் தெரிய வந்ததுடன், சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபர் என்பதனையும் கண்டறிந்து , அவர் தொடர்பில் பிரான்ஸ்க்கு அறிவித்து, குறித்த நபரை பிரான்சிடம் கனடா ஒப்படைத்தது.

சன்னாவையும் நாடு கடத்த கோரும் இலங்கை

குறித்த நபரையும் இலங்கையில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக இலங்கைக்கு நாடு கடத்த இலங்கையும் கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.