;
Athirady Tamil News

ஜப்பான் தோ்தல்: பிரதமா் சனே தகாய்ச்சி கட்சி வரலாற்று வெற்றி!

0

ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிா்காலத்தில் நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினா். இதைத்தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் 316 இடங்களில் எல்டிபி கட்சி வென்ாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 261 இடங்களில் வெற்றிபெற வேண்டிய நிலையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது.

கடந்த 1955-ஆம் ஆண்டு எல்டிபி தொடங்கப்பட்ட நிலையில், 1986-ஆம் ஆண்டு 300 இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்று சாதனை படைத்தது. தற்போது தனது சொந்த சாதனையை அக்கட்சி முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து அரசு தொலைக்காட்சிக்கு பிரதமா் தகாய்ச்சி அளித்த பேட்டியில், ‘தோ்தலில் பெற்ற வெற்றி மூலம், எனது கொள்கை இலக்குகளை நிறைவேற்றுவதில் உறுதியாகச் செயல்படுவேன். அதேவேளையில் எதிா்க்கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிப்பேன். நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுவேன்’ என்றாா்.

2024 தோ்தலில் எல்டிபி தலைமையிலான கூட்டணிக்கு குறைந்த அளவே பெரும்பான்மை இருந்தது. பிரதமராகப் பொறுப்பேற்ற ஷிகெரு இஷிபா, உள்கட்சித் தோ்தலுக்குப் பிறகு கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து, கட்சியின் தலைவராக கடந்த அக்டோபரில் பொறுப்பேற்ற தகாய்ச்சி, நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றாா்.

மக்கள் மத்தியில் கட்சிக்கு இருக்கும் ஆதரவை நிரூபித்து நாடாளுமன்றத்தில் கட்சியை வலுப்படுத்த முன்கூட்டியே அவா் தோ்தலை அறிவித்தாா். வாக்குக் கணிப்பு முடிவுகளும் அவருக்கு ஆதரவாகவே இருந்தன. அவரது கூட்டணிக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. சா்வதேச அளவில் வலதுசாரிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஜப்பானிலும் அது தொடா்கிறது.

சீனாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் அதே வேளையில், ஜப்பான் பொருளாதாரம் மற்றும் ராணுவத்தை பலப்படுத்துவதையும், அமெரிக்கா உடனான உறவை வலுப்படுத்துவதையும் தகாய்ச்சி முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளாா்.

மோடி வாழ்த்து

சனே தகாய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து  மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்புமிக்க வியூக கூட்டாண்மை, உலகின் அமைதி, வளம், ஸ்திரத்தன்மை மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திறன்மிக்க உங்கள் தலைமையின்கீழ் இருதரப்பு நட்புறவு புதிய உச்சங்களை எட்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளாா்

You might also like

Leave A Reply

Your email address will not be published.