;
Athirady Tamil News

கல்முனை ஆணையாளரை சந்தித்த உலமாக்கள் : தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுதல், பெருநாள் களியாட்டம் தொடர்பாக இறுக்கம் பேண வலியுறுத்தல்.

0

மருதமுனை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு (12.02.2026) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புனித ரமழான் மாதம் அண்மித்து வருவதை முன்னிட்டு, மாணவர்கள் இக்காலப்பகுதியை வணக்க வழிபாடுகளில் சிறப்பாக ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, ரமழான் காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கிடையிலான சமநிலையை பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மருதமுனை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறிப்பாக கடற்கரை மற்றும் அதனை அண்டிய இடங்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களின் இராக்கால வேடிக்கை மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கான அனுமதி வழங்கும் விவகாரம் தொடர்பிலும் விரிவான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. இவ்விடயங்களில் சமூக நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், மருதமுனை எல்லைக்குட்பட்ட மாநகர சபையின் சொத்துக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அவை ஊரின் சமூக நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரப் பெறுமானங்களுக்கு முரணாக பயன்படுத்தப்படாத வகையில் மாநகர சபையும் அதன் ஆணையாளரும் தேவையான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஜம்மிய்யதுல் உலமா பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் மருதமுனை உலமா சபை சார்பில் அஷ்ஷெய்க் ஏ.ஆர். கியாஸ் பலாஹி, அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். முஜீப் (ஸலபி), அஷ்ஷெய்க் எம்.எப்.எம். அன்சார் மெளலானா (நளீமி), அஷ்ஷெய்க் எம்.எம். றஸ்மி (ஸலபி), அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். அர்சத் (நளீமி) மற்றும் அஷ்ஷெய்க் முபாறக் முஅஸ்ஸம் (நளீமி) ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.