;
Athirady Tamil News

மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு

0

மருதமுனையில் “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” நூல் வெளியீடு

மேஜர் டிலான் ஷஹி

மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று (14) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் வெளியிடப்பட்டது.

மருதமுனை ஆவணக்காப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் மற்றும் அபாயகர மருந்து பயன்பாட்டின் தாக்கங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு முயற்சிகள், சமூக–மத–கல்வி அமைப்புகளின் பங்கு ஆகியவை 120 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன. இது சமூக விழிப்புணர்வை உருவாக்கும் முக்கியமான ஆக்கமாகக் கருதப்படுகிறது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பி. முஹம்மட் றஷாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகமும், வர்த்தக வாணிப அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான எம்.எம். நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

கௌரவ அதிதிகளாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ. கஜேந்திரன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை மருதமுனை கிளைத்தலைவர் அஷ்-ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மெளலானா (நழிமி), சம்மாந்துறை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச். நைறோஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், அல்-மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா, கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எப். ஹினாபா ஆகியோர் கலந்துகொண்டதுடன், நூலின் முதற்பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான ஏ.எம். பதுறுதீன் பெற்றுக்கொண்டார். மேலும், நூலின் சமர்ப்பண பிரதியை பொலிஸ் பரிசோதகர் மர்ஹூம் இஸட். ஏ.எச். ரஹ்மான் அவர்களின் சகோதரி இஸட். ஏ. நஜ்முனிசா ஆசிரியை பெற்றுக்கொண்டார்.

சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தின் தாக்கத்தை குறைத்து, இளைஞர்கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் வெளியான இந்நூல், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான முயற்சியாகப் பாராட்டப்படுகிறது. மருதமுனை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.