நீர்கொழும்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இராஜினாமா
நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பகல், நீர்கொழும்பு மாநகர சபையில் மாநகர சபை உறுப்பினர்களுடன் மேயர் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
தீர்மானம்
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஜூட் பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, மாநகர ஆணையாளர் நுவனி சுதுசிங்க மற்றும் மாநகர சபையின் அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேயர் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேயர் ரொபர்ட் ஹின்கெந்த, தனது இராஜினாமா ஒரு தனிப்பட்ட தீர்மானம் என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அதிகார அமைப்பினால் தான் எவ்வாறு மேயராக நியமிக்கப்பட்டாரோ, அதேபோன்று எதிர்காலத்தில் நீர்கொழும்பு நகரத்திற்கு புதிய மேயர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.
தாம் பதவியேற்றபோது இருந்த நிலையை விட, மக்கள் நலன் சார்ந்த பாரிய மாற்றங்களை நகரத்தில் ஏற்படுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
தான் மேயராக பணியாற்றிய ஒரு வருடம் மற்றும் ஒன்றரை மாதங்கள் (13.5 மாதங்கள்) காலப்பகுதிக்குள், மாநகர சபையிலும் ஒட்டுமொத்த நீர்கொழும்பு நகரத்திலும் பல மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்க முடிந்தமை குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.