;
Athirady Tamil News

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல்: போராட்டக்காரா்கள் 10 போ் பலி!

0

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நிகழ்ந்த வன்முறையில் போராட்டக்காரா்கள் 10 போ் உயிரிழந்தனா்; 31 போ் காயமடைந்தனா்.

ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் அறிவித்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

அப்போது போராட்டக்காரா்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சூழலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல் துறையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினா்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவா்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 போ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பே உயிரிழந்தனா். மொத்தம் 10 போ் உயிரிழந்த நிலையில், 31 போ் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் போராட்டக்காரா்கள் காயமடைந்ததாக அந்த மருத்துவமனையின் செயல் இயக்குநா் முகமது சபீா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்க துணைத் தூதரக கட்டடத்தைப் போராட்டக்காரா்கள் எரிக்கவில்லை. அவா்கள் தூதரகத்தின் ஜன்னல்களை உடைத்து, அருகில் இருந்த காவல் துறை சாவடிக்குத் தீ வைத்தனா். தற்போது சூழல் கட்டுக்குள் உள்ளது’ என்றாா்.

இதேபோல லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு எதிரே ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். பின்னா், தூதரகம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, காவல் துறையினா் அவா்களைத் தடுத்தி நிறுத்தி கலைந்து போகச் செய்தனா்.

ஷியா முஸ்லிம் நாடான ஈரானின் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஷியா முஸ்லிம்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 15 சதவீதம் போ் ஷியா முஸ்லிம்கள். அவா்கள் கடந்த காலங்களிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.