;
Athirady Tamil News

பங்கு சந்தை முதலீட்டில் ரூ.1.8 கோடி நஷ்டம்: மனைவி, மகன்களுடன் தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு

0

மும்பை,

மராட்டிய மாநிலம் நந்துர்பூரில் உள்ள சாவ்காவ் மாவட்ட பஞ்சாயத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோகேஷ் பாட்டீல்(வயது 40). இவர் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகாவில் உள்ள கட்டிஜ் கிராமத்துக்கு சென்று இருந்தார். நேற்று காலை வழக்கம்போல பால் கொடுக்க பால்காரர் தலைமை ஆசிரியரின் வீட்டுக்கு வந்தார்.

தலைமை ஆசிரியர்
பால்காரர் பலமுறை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டுக்குள் தலைமை ஆசிரியர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டுக்குள் குடும்பத்தினர் பிணமாக கிடந்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தலைமை ஆசிரியர் மற்றும் படுக்கையில் பிணமாக கிடந்த அவரது மனைவி மாதுரி (37), மகன்கள் அதர்வா (11), சிவான்சின் (9) ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பங்கு சந்தை நஷ்டம்
முதல்கட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் வீட்டில் இருந்து 22 பக்க கடிதத்தை கைப்பற்றினர். அதில் பங்கு சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் தலைமை ஆசிரியர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

யோகேஷ் பாட்டீலுக்கு பங்கு சந்தை முதலீட்டில் ரூ.1.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கடன் சுமை அதிகரித்து உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தது தெரியவந்து உள்ளது. தற்கொலை கடிதத்தில் தங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை என தலைமை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் விசாரணை
மேலும் அவரது கடன், சொத்து விவரங்களையும் கடிதத்தில் எழுதி உள்ளார். சம்பவம் குறித்து சோலாப்பூர் வைராக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவம் கிராம மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.