;
Athirady Tamil News

யாழ். கச்சதீவில் அந்தோனியார் திருவிழாவில் பதற்ற நிலை ; தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

0

யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது,

திருவிழாவிற்காக கச்சதீவிற்குள் நுழைந்தபோது அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயல்பட்டதாக கூறினார்.

பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் தன்னுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றதாகவும் கூறினார். திருவிழா நிறைவடைந்து திரும்பும் போதும் இதே நிலை நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இளம் கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், வெயிலும் கடும் நெரிசலும் காரணமாக பலர் மயக்கமுற்றதாகவும் தெரிவித்தார்.

இதனால், பக்தர்களை கடற்கரையில் சற்று நேரம் அமர அனுமதிக்குமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களைத் தாக்கியதாக குற்றம்சாட்டிய அவர், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

பின்னர் உயர் அதிகாரி ஒருவர் தலையிட்டு நிலைமையை சமன்செய்து, மக்களை அமர அனுமதித்ததாகவும் கூறினார்.

மேலும், பக்தர்கள் நுழைய நான்கு வழிகள் மட்டுமே உள்ளதால் பெரும் திரளான மக்களை சமாளிக்க போதுமான வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டினார்.

திருவிழா முடிந்த பின் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் வரை பொதுமக்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10 முதல் 12 மணி நேரம் வரை கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இருப்பினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்குத் தனித்தனியான நுழைவுப் பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இந்திய அரசு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் யாழ்ப்பாணம் ஏற்பாட்டுக்குழு இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.