;
Athirady Tamil News

லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்

0

பிரித்தானியாவில் யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தாக்குதல்
வடக்கு லண்டனின் ஹட்சோலா(Hatzola) யூத தன்னார்வ ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் மீது தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இந்த தீவைப்பு சம்பவமானது நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை நடத்தப்பட்ட இந்த தீ வைப்பு தாக்குதலில் 4 அவசர கால வாகனங்களும் முற்றிலும் தீயில் கருகி சிதலமடைந்துள்ளன.

காலை 1.40 மணியில் கேட்ட வெடிப்பு சத்தத்தை தொடர்ந்து லண்டன் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் வாகனத்தில் பற்றிய தீயை போராடி அணைத்தனர்.

இந்த மீட்பு பணியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் இருந்த 34 பேர் தற்காலிகமாக அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் தற்போது மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பொலிஸார் இந்த சம்பவத்தை யூத எதிர்ப்பு வெறுப்புணர்வு குற்றமாக வகைப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் கண்டனம்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில், மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் தன்னார்வ ஆம்புலன்ஸ் சேவையை இலக்காக வைப்பது ஒரு கோழைத்தனமான மற்றும் வெறுப்பு நிறைந்த செயல் என்று சாடியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.