;
Athirady Tamil News

கொழும்பை உலுக்கிய தம்பதியின் சடலங்கள் ; அயல் வீட்டினர் அரங்கேற்றிய சம்பவம்; காட்டிக்கொடுத்த தங்கத்தோடு

0

கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு
இது தொடர்பாக உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் விசாரணை முடங்கியிருந்தது.

அதிருப்தியடைந்த உறவினர்கள், இது குறித்து ஜனாதிபதி செயலகத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர். இந்த நிலையில், காணாமல் போன பெண்ணின் சகோதரி, தனது சகோதரிக்குச் சொந்தமான தங்கத் தோடு போன்றே ஒரு தோட்டை அண்டை வீட்டுப் பெண் அணிந்திருப்பதை தற்செயலாகக் கண்டுள்ளார்.

இது குறித்து எழுந்த பலத்த சந்தேகத்தையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல மணிநேர விசாரணைகளின் பின்னர், அண்டை வீட்டைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் அவரது 48 வயதுடைய மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காட்டிக்கொடுத்த தங்கத்தோடு
குறித்த சந்தேக நபர் ஒரு கடும் போதைப்பொருள் பாவனையாளர் என்றும், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தின்படி,

இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் காரணமாகவே இந்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தம்பதியினரைத் தங்களது வீட்டிற்குப் பின்புறமாக அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதங்களால் கழுத்தை வெட்டியும், தலையைத் துண்டித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலங்களை எவரும் கண்டுபிடிக்க முடியாதபடி வீட்டின் பின்புறம் உள்ள ஒரு பள்ளத்தில் புதைத்து மறைத்தமையால், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்து வந்துள்ளது.

அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 04 நீதவானின் உத்தரவிற்கமைய, இன்று (24) சம்பவ இடத்திற்கு சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டு விசாரணை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறப்பு தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரியின் முன்னிலையில், தற்போது அந்த இடத்தில் சடலங்களை தோண்டி எடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆறு வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.