;
Athirady Tamil News

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் மீது தாக்குதல்: 2 இந்தியர்கள் மாயம்

0

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியிலும் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. தங்கள் அனுமதியின்றி சென்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மிரட்டி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

இந்த நிலையில், நேற்று ஓமன் கடற்கரைக்கு அருகே உள்ள சோஹார் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த எம்.டி. பெட்ரோ டால்பின் என்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எம்.டி. வால்தெரா என்ற மற்றொரு வணிகக் கப்பல் மீதும் அடையாளம் தெரியாத ஏவுகணைப் பொருள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களின்படி, சர்வதேச கடல் வழிகளில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதையும், கடல் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.