ஒன்றிணைந்து சவால்களைக் கடக்கத் தயாரா?
எவருமே முன்கணிக்க முடியாத திருப்பங்களையும், ஒழுங்கு மாற்றங்களையும் உலகம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு யுத்தமானது உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சிறியதும் பெரியதுமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இலங்கை என்ற நாடு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட முடியாது. இந்தச் சவால்களைச் சாதுர்யமான முறையில் கடந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் இனி இதுவே ‘புதிய இயல்பு நிலை’ என்ற அடிப்படையில், அரசாங்கமும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைச் சமூகங்களும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.
ஒரு யுத்த களத்தில் முன்னின்று கட்டளையிடுகின்ற அதிகாரி கொல்லப்பட்டாலோ அல்லது காயமடைந்தாலோ, முழுப் படையுமே அவருக்குச் சிகிச்சை அளிப்பதில் மட்டும் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதனை இப்போது ஈரானிலும் காண்கின்றோம். அதுபோல, ஒரு எதிர்பாராத நெருக்கடி வரும்போது, அந்த நெருக்கடி தீரும் வரை நாட்டு மக்களுக்குத் தேவையான ஏனைய காரியங்களையெல்லாம் முற்றுமுழுதாக முடக்கிவிட்டு, ‘பிரச்சினை தீர்ந்த பிறகு மீளத் தொடங்குவோம்’ என்று இருந்துவிட முடியாது. நமக்கிருக்கின்ற அடுத்தடுத்த வாய்ப்புகளின் ஊடாகப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு நாம் பழகிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 30 வருடங்களாக யுத்தம் நீடித்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கமை கலவரம் இடம்பெற்றது. தொடர்ந்து மைத்திரி-ரணில் ஆட்சியில் திகண கலவரமும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலும் பெரும் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தின.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொவிட்-19 தொற்றும், பொருளாதார வீழ்ச்சியும் நாட்டு மக்களுக்கு மத்தியில் என்றுமில்லாத விளைவுகளை ஏற்படுத்தின. பொருளாதாரச் சரிவைச் சீர்செய்ய உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க கோட்டாபய தவறியதால், அது மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் ஒரு வகையான தேக்கநிலை காணப்பட்டது.
இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகி, என்.பி.பி. (NPP) ஆட்சியமைத்தவுடன் தங்களுக்குப் புதியதொரு விடியல் பிறக்கும் என மக்கள் நம்பினார்கள். அரசாங்கம் அதற்கான சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்த வேளையில், ‘தித்வா’ புயல் வெள்ளம் பெரும் அழிவுகளை உண்டுபண்ணியது. அதிலிருந்து நாடு மீள்வதற்குள், நான்காயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கின்ற மத்திய கிழக்கு யுத்தத்தின் எதிர்விளைவுகள் நமது நாட்டிலும் வெகுவாக உணரப்படுகின்றன.
இலங்கை இத்தருணத்தில் பொருளாதார, இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு எனப் பல்பக்க நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடி எனும்போது அந்நியச் செலாவணி வீழ்ச்சி, வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் குறைவடைதல், எரிபொருள் விலை உயர்வினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வினால் ஏற்படும் சமூக விளைவுகள் என அது ஒரு தொடராக நீள்கிறது. மறுபுறத்தில், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, ஹோட்டல் துறை பாதிப்பு, ஆடை மற்றும் தேயிலை போன்ற ஏற்றுமதி வர்த்தகத்தில் தளம்பல் நிலை எனப் பேரினப் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களைத் தரையிறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்றாலும், ஈரான் கப்பல் பணியாளர்கள் விடயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கான தைரியமான முடிவை எடுத்திருந்தது. இப்படியானதொரு சூழலில், ஈரானுக்கு எதிரான தரைவழிப் போரைத் தொடங்குவதென்றால், இலங்கையின் மத்தள விமான நிலையத்தை ஆயுதத் தளவாடங்களுக்கான தளமாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கை, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமநிலையைப் பேணிக்கொண்டு இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறத்தில், அமெரிக்காவின் நகர்வுகளால் அரபு நாடுகள் இரண்டு அணிகளாகப் பிளவுபடும் அபாயமுள்ள நிலையில், அவற்றுக்கிடையில் நடுநிலைத் தன்மையைப் பேணுவதற்கான இராஜதந்திர அணுகுமுறைகள் அநுர அரசாங்கத்திற்கு அவசியமானவை.
எனவே, இவற்றையெல்லாம் கடந்து செல்வதற்கான கூட்டு வேலைத்திட்டம் ஒன்று அவசியப்படுகிறது. அரசாங்கம், துறைசார் வல்லுநர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்தால் மட்டுமே இதில் வெற்றியைக் காண முடியும். அதைவிடுத்து, எரிபொருள் விலையை அதிகரிப்பது போலவோ அல்லது வேலை நாட்களில் ஒன்றைக் குறைப்பது போலவோ, இலகுவாக இந்தச் சவால்களை இலங்கை கடந்து போகலாம் என்று கனவிலும் நினைக்கக் கூடாது.
இராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சார்ந்த நெருக்கடிகள் அடிப்படையில் வேறுபட்டவை என்றாலும், இன்றைய நிலைவரப்படி அவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவையாகத் தெரிகின்றன. எனவே, அரசாங்கம் இதற்காக ஒரு நிபுணர் குழுவைத் தயார் செய்ய வேண்டியது அவசரத் தேவையாகும். தங்களிடம் இருப்பவர்கள் படித்தவர்கள், கலாநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்காமல், உண்மையில் இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள், மூத்த இராஜதந்திரிகள், பூகோளம் மற்றும் அரசியல் விற்பன்னர்களைக் கொண்ட குழுவொன்றை அமைக்க வேண்டும்.
இதில் ஆளும் கட்சி சார்பானவர்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள், முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்து நேர்மையாகச் சேவையாற்றியவர்கள், நுண்ணறிவு படைத்த இளம் மூளைசாலிகள் உள்ளடக்கப்படுவது சிறப்பு. அதேபோல், காஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய ‘கியூ.ஆர்.’ (QR) முறையைப் பயன்படுத்துவது போல, முன்னர் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களைப் பயன்படுத்தியேனும் பொருளாதார நெருக்கடிகள் தலைக்கு மேலால் போகாமல் தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்ற தோரணையில் எதிர்க்கட்சிகள் செயற்படக் கூடாது. இக்கட்டான காலத்தில்கூட அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து, எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் இவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மிக முக்கியமான பங்களிப்பு அதிகாரிகளாலும் மக்களாலும் வழங்கப்பட வேண்டும்.
பல அரச திட்டங்கள் வெற்றியடையாமல் போனதற்கு அரசாங்க அதிகாரிகளே காரணமாவர். இதற்குப் பல திட்டங்களை உதாரணமாகக் கூறலாம். அதாவது, மூலோபாயத் திட்டங்களை வகுப்பவர்கள் அதனை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு, அதனை நடைமுறைப்படுத்தும் கீழ்மட்ட ஊழியர்கள் விளங்கிச் செயற்படாமையே இதற்குக் காரணமாகும்.
இலங்கை இப்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் சர்வ சாதாரணமானவை அல்ல; அவை ஒரு பல்பக்கச் சவால்களாகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகளால் குறுகிய காலத்தில் நாட்டில் வெளிப்படையான வீழ்ச்சிகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பாதுகாப்புச் சார்ந்த மற்றும் இராஜதந்திர ரீதியான சவால்கள் இதைவிடப் பாதூரமானவை. ஊகிக்க முடியாத, நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பொறிக்குள் நாடு சிக்கலாம்.
எனவே, “மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை வகிக்கின்றோம்; தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம்” என்று வெறுமனே கூறிக்கொண்டிருக்காமல், அரசாங்கம் உண்மையாகவே கைமேல் பலன்தரக்கூடிய காத்திரமான மூலோபாய நகர்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது. அப்படிச் செய்தால் மட்டுமே இதனെയெல்லாம் ஒரு நாடாக நாம் கடந்து செல்ல முடியும். அதற்கு எதிர்க்கட்சிகளும், அதிகாரிகளும் மக்களும் துணை நிற்க வேண்டும். இல்லாவிட்டால், கோட்டாபய காலத்து நெருக்கடியை விட இந்தச் சவால்கள் பாரதூரமானவையாக அமையக்கூடும்.
மொஹமட் பாதுஷா