இலங்கையில் சீனி விலை உயர்வு அபாயம் ; மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் சீனி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு தேவைக்கான சீனியின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை மாற்றங்கள் இலங்கையின் சந்தையை நேரடியாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், இலங்கையில் சீனி விலை கணிசமாக உயரக்கூடும் அபாயம் நிலவுகிறது என தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு போர் சூழல் மற்றும் எல்-நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையின் மாதாந்த சீனி தேவை சுமார் 60,000 மெட்ரிக் தொன் ஆகும் நிலையில், உள்ளூர் உற்பத்தி அதன் 10 சதவீதத்தையே பூர்த்தி செய்கிறது. பெலவத்த மற்றும் செவனகல சர்க்கரை ஆலைகளில் இருந்து உற்பத்தியாகும் சிவப்பு சீனி மட்டுமே உள்ளூர் தேவையில் குறைந்த பங்கை வழங்குகிறது.
இலங்கை பெரும்பாலும் இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதி செய்வதுடன், ஐக்கிய அரபு இராச்சியம், பிரேசில் மற்றும் போலந்து போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.
இதற்கிடையில், மாற்று சந்தைகள் மூலம் சீனி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியா சுத்திகரிக்கப்பட்ட சீனி (Refined Sugar) ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை என்பதால், விலை சற்றே அதிகமாக இருந்தாலும் இறக்குமதி தொடர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பால், எதிர்காலத்தில் சீனி விலை உயர்வது தவிர்க்க முடியாததாக இருக்கும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.