;
Athirady Tamil News

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவிகளை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

0

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், கடந்த மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புப் படை
2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கும், அது தொடர்பான அல்லது அதற்கு அனுகூலமான விடயங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காகவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

“2026 பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்கும் சட்டம்” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் மூலம், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் நாள் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை வகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், அந்தப் பதவியை வகிக்கும் நபர் ஆயுதப் படைகளில் அவர் சார்ந்த சேவைப் பிரிவிற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டம் அமலுக்கு வருவதோடு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும், பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என அந்தச் சட்டமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.