இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களில் 10 பேர் கடந்த 9ஆம் திகதியும், மேலும் நால்வர் கடந்த 14ஆம் திகதியும் மன்னார் வடக்கு – இரணைதீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி. கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அந்த மீனவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களது வழக்கு, இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த 14 மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.