செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு
;
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அத்துடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏழாவது பரிந்துரையில் மரபணு பரிசோதனை வெளிநாட்டில் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதையும், இலங்கை நீதி அமைச்சர் கடந்த வருடம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த போது, மரபணு பரிசோதனைக்கு உள்ளூரில் நிபுணர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மரபணு பரிசோதனை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்ய முடியுமா? அவ்வாறு நிபுணர்கள் உள்ளனரா மற்றும் அது தொடர்பான விபரங்கள், வெளிநாட்டில் செய்வது என்றால் எந்த பல்கலைக்கழகங்களில் செய்ய முடியும் என்ற விடயத்தையும் எதிர்வரும் 27ம் திகதி அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பணித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் மரபணு பரிசோதனை தொடர்பான ஆய்வுகளை வெளிநாட்டில் உள்ள அனுபவம் மற்றும் நற்பெயர் கொண்ட பல்கலைக்கழகங்களில் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அதன்போது சட்ட வைத்திய அதிகாரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் மூலம் மரபணு பரிசோதனையை செய்ய முடியும் என தெரிவித்திருந்ததுடன்
அதனை மறுத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் புதிய இயந்திரத்தில் செய்யும் முதலாவது பரிசோதனையாக செம்மணி இருக்க முடியாது என வலியுறுத்தியதுடன் அதன் பின்னர் அது தொடர்பில் எழுத்து மூலமான சமர்ப்பணத்தையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.