;
Athirady Tamil News

யாழில். 651.96 மில்லியன் ரூபா நிதியில் 334 திட்டங்களை முன்னெடுப்பு

0
யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டன.  
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கடற்தொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கோரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான ‘சமூக சக்தி’ தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.

அத்துடன், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 4,372 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீதி வலையமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற இடங்களைச் சீரமைப்பதற்கான முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.

வீதிப் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வடிகால்களைப் பாதுகாப்பாக மூடுதல், பாடசாலைகளுக்கு அருகில் பாதசாரிக் கடவைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன்,  மாவட்டச் செயலகம், மத்திய அரசுத் திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றால் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. வீடமைப்பு, விவசாயம், கிராமிய வீதி அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.