நிந்தவூரில் சலூன் கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
இக்கலந்துரையாடலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலந்து கொண்டு, சலூன் கடைகளின் சுகாதார நிலை, கடைகளின் சுற்றுச்சூழல் சுத்தம், கழிவு முகாமைத்துவம் மற்றும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளித்ததுடன், அவற்றை மேம்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மேலும், நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் சார்பில் கலந்து கொண்ட ஒழுக்காற்றுக் குழுத் தவிசாளர்கள், பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பாக கல்வி அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சலூன் கடை உரிமையாளர்களுக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக, மாணவர்களுக்கு ஒழுக்கமும் கல்விச் சூழலுக்கும் ஏற்ற வகையிலான சிகை அலங்கார முறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, பிரதேச சபை தவிசாளரினால் பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம், கடைகளின் சுகாதார நிலைமை, சட்டப்பூர்வமான வியாபார அனுமதிப்பத்திரங்கள் மற்றும் விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், இன்று முதல் (07.05.2026) அமுலுக்கு வரும் வகையில், நிந்தவூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து சலூன் கடைகளும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் முழுமையாக மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகன ஒழுங்குமுறையுடன் முடி வெட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு, சேவைத் தர மேம்பாடு மற்றும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார்
