பொது இடத்திலுள்ள மரங்களிலிருந்து விழுந்த மாம்பழங்களை எடுத்தால் ரூ. 3.50 லட்சம் அபராதம்!
சிங்கப்பூரில் பொது இடத்தில் கீழே விழுந்து கிடந்த மாம்பழத்தை எடுத்தால் ரூ. 3.75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்தியப் பெண் ஒருவர் எச்சரித்துள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரியங்கா சின்ஹா. இந்தியப் பெண்ணான அவர் அந்நாட்டில் பின்பற்றப்படும் பொதுச் சொத்து சட்டங்கள் குறித்த எச்சரிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சிங்கப்பூரில் பொது இடத்தில் உள்ள மரத்திலிருந்து கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்தால் கூட, 5,000 சிங்கப்பூர் டாலர் (ஏறத்தாழ 3.5 லட்சம் ரூபாய்) வரை கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் நடப்பட்டுள்ள பழ மரங்கள் அனைத்தும் அரசின் சொத்தாகக் கருதப்படுவதால், உரிய அனுமதியின்றி பொதுமக்கள் அதிலிருந்து பழங்களைப் பறிக்கவோ அல்லது கீழே விழுந்தவற்றைச் சேகரிக்கவோ பொதுவாக அனுமதி இல்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். அவரது இந்தப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியதோடு இந்தியப் பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரையில் கிடக்கும் பழங்களை எடுப்பதற்குக் கூட இவ்வளவு பெரிய தண்டனையா என்று அவர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பலர் இதனை இந்தியாவின் சூழலோடு ஒப்பிட்டும் பேசி வருகின்றனர். இந்தியாவில் சாலையோரங்களில் உள்ள பழ மரங்களிலிருந்து பொதுமக்கள் தாராளமாகப் பழங்களை எடுத்துக்கொள்வதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற ஒரு விதியை இந்திய நகரங்களில் நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று சிலர் நகைச்சுவையாகயும் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ இந்த விதிமுறை சிங்கப்பூரின் கடுமையான பொது ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.