;
Athirady Tamil News

யானைகளுக்கு இடையேயான மோதலில் சென்னையை சேர்ந்த பெண் உயிரிழப்பு

0

யானைகளுக்கு இடையேயான மோதலில் சிக்கி, சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.

யானை சண்டையில் சென்னைப் பெண் உயிரிழப்பு

சென்னையை சேர்ந்த 33 வயதான பெண் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பாட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

குளிப்பாட்டப்படும் போது, கஞ்சன் என்ற யானை, மார்த்தாண்டா என்ற மற்றொரு யானையைத் தாக்கியது. யானையை கட்டுப்படுத்த பாகன்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த மோதலின் போது, அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் மீது யானை நிலைதடுமாறி விழுந்தது. அதன் பின்னர், யானை எழுந்திருக்கும் போது, மீண்டும் அந்த பெண்ணை மிதித்துள்ளது.

கணவர் மற்றும் 6 வயது குழந்தை முன் அந்த பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவத்திற்கு வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் பி காந்த்ரே இரங்கல் தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் நடத்தையைக் கணிப்பது கடினமாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் யானைகளின் தும்பிக்கைகளைத் தொடுவதையும், புகைப்படம் எடுப்பதற்காக அருகில் நிற்பதையும், யானைகளைக் குளிப்பாட்டுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிப்பதை உறுதிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.