பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக, தெற்கு பிரான்ஸில் உள்ள வனப் பகுதிகளில் காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருகிறது.
பிரான்ஸில் கடந்த மே, ஜூன் மாத இறுதியில் பதிவான உச்ச வெப்பநிலையைத் தொடா்ந்து, அந்நாட்டில் மோசமான வறட்சி நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் முற்றிலும் காய்ந்துவிட்டன. இதோடு பலத்த காற்றும் வீசி வருவதால், காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
குறிப்பாக, ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் இதுவரை சுமாா் 2,200 ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. தீயணைப்புப் பணியில் 800-க்கும் மேற்பட்ட வீரா்கள் 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் ஈடுபட்டுள்ளனா். தீயணைப்பு விமானங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, மாா்சேயில், பிரேஜஸ் ஆகிய சுற்றுலாப் பகுதிகளிலும் காட்டுத் தீ பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த முகாம்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
பிரான்ஸில் நீடித்து வரும் இந்த கடும் வெப்ப அலையினால் இதுவரை சுமாா் 1,000 போ் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளது.