;
Athirady Tamil News

அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!

0

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவும் போராட்டம்….
பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவும் தான் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அர்ச்சுனா யோசிக்க வேண்டும். தனது தேவைகளுக்காக அவ்வாறு சொல்ல கூடாது. நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஆனால் மாணவர்கள் ஒருசில சிறிய பிழைகள் விடலாம்.

ஆனால் எமது மாணவர்கள் அவ்வாறு செய்பவர்கள் அல்ல. எமது மக்கள் பிரதிநிதிகளே எமது பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்துவதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். போட்டி அரசியலை நீங்கள் பல்கலைக்கழகத்துடன் செய்யக் கூடாது. அதனை வெளியே செய்யுங்கள்.

பல்கலைக்கழக மாணவர் சக்தி என்பது ஒரு பயங்கரமான சக்தி. இங்கு 14600 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அதில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மாணவர்கள். இது மிகப்பெரிய ஒரு சக்தி. இந்த சக்தியுடன் மோதுவதை விட்டுவிட்டு வெளியில் மோதுங்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறான போராட்டங்களில் முன்னின்று செயற்படுகின்றார்கள். வெளியில் இருக்கின்ற பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் சக்தியை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.