;
Athirady Tamil News

போா்நிறுத்துக்கு மத்தியில் ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

0

கடந்த ஏப். 8 முதல் அமலில் உள்ள தற்காலிக போா்நிறுத்துக்கு இடையே, தெற்கு ஈரானில் அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியது.

அமைதிப் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடந்து வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டரம்ப் திங்கள்கிழமை தெரிவித்திருந்த நிலையில், ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கடற்பகுதியில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் படகுகள் தாக்கப்பட்டுள்ளன.

ஈரான் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாட்டுப் படையினரைப் பாதுகாக்கும் ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப்பிரிவு (சென்ட்காம்) செய்தித் தொடா்பாளா் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவின் நடவடிக்கை, போா்நிறுத்தத்தின் ‘கடும் அத்துமீறல்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானின் ஹாா்மோஸ்கான் மாகாணத்தில், குறிப்பாக ராணுவத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைந்துள்ள பந்தா் அப்பாஸ் நகரைச் சுற்றிலும் பலத்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இத்தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல் படையை (ஐஆா்ஜிசி) சோ்ந்த 4 வீரா்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ஐஆா்ஜிசி எச்சரித்தது. ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.