;
Athirady Tamil News

தென் கொரிய முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறை

0

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 டிசம்பர் மாதத்தில், தென் கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாகக் கூடி அதற்கு எதிராக வாக்களித்ததால், அந்த உத்தரவு வெறும் 6 மணித்தியாலங்களில் ரத்தானது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்குத் துணையாக நின்று, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியில் ஈடுபட்டதாக முன்னாள் நீதியமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆரம்ப மணித்தியாலங்களில், அரசாங்கத்திற்கு எதிரான முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைப்பதற்குச் சிறைச்சாலைகளில் உள்ள இடவசதி குறித்து நீதியமைச்சர் பாக் சுங்-ஜே ஆராய்ந்ததாக அரச தரப்பு நிரூபித்துள்ளது.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சட்டத்தையே சதித் திட்டத்திற்கான ஒரு கருவியாக அவர் மாற்றியதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அரச தரப்பு கோரிய 20 ஆண்டுகளை விடவும் கூடுதலாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.