;
Athirady Tamil News

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசன பட்டி அணியாத 400 பேருக்கு அதிரடி

0

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறைகளை மீறிய சுமார் 400 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த புதிய சட்ட நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக, அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் புள்ளிகளில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சலுகைக் காலம்
கடந்த 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள அனைத்து நபர்களும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உற்பத்தியின்போது ஆசனப் பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாத சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தேவையான வசதிகளைச் செய்துகொள்வதற்காக, இந்த சலுகைக் காலப் பகுதியில் தற்காலிகமாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பு முழுவதும் இந்த சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள அதிகாரிகள், விதிமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுமாறு சாரதிகள் மற்றும் பயணிகளிடம் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.