;
Athirady Tamil News

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 589 ஆக உயர்வு

0

கராகஸ்,

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,980 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரட்டை நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணியளவில், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கின. ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த இரட்டை பூகம்பம் வெடித்தது. வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்தது.

தலைநகர் கராகசில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்பட நாடு முழுவதையும் புரட்டிப்போட்டது.

விமான நிலையம் சேதம்
இந்த அதிர்வுகளால் தலைநகர் கராகஸ் மற்றும் லாகுவைரா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான வெனிசுலாவின் மைகுயெட்டியா விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. சாலைகள் இரண்டாக பிளந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தன. வளர்ப்பு பிராணிகளுடன் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அவசரநிலை
பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றநிலையில் அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிட்டார்.

அமெரிக்கா உதவி
இதனிடையே, வெனிசுலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக வெளியுறவுத் துறையின் துணை மந்திரி கிரிஸ்டோபர் லன்டாவ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

பேரிடர் உதவிக் குழு, அத்தியாவசியப் பொருட்களை வெனிசுலா மக்களுக்கு வழங்கும் சிறப்பு செயல்குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும் அண்டை நாடுகளான பிரேசில், எல் சல்வடார், கியூபா, டொமினிகன் குடியரசு உள்ளிட்டவை உடனடியாக பேரிடர்கால மீட்பு உதவிகளை அனுப்பி வைத்தன. மேலும் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டவுள்ளதாக தெரிவித்துள்ளன.

589 பேர் உயிரிழப்பு
இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை அதிகாரப்பூர்வமாக 589 பேர் உயிரிழந்துள்ளதாக வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். மேலும் 2,890 பேர் படுகாயமடைந்துள்ளனர். எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டக்கூடும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.