ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை – அங்குனகொலப்பெலஸ்ஸ சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பெண் கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அங்குனகொலப்பெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நேற்று (29) அங்குனகொலப்பெலஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் உடலின் மீதான பிரேத பரிசோதனை இன்று (30) நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.