;
Athirady Tamil News

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனையுடன், கண் பரிசோதனைகளும் மேற்கொள்ள நடவடிக்கை

0

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய வாழ்விற்கான ஒளியூட்டல் திட்டத்தின்’ யாழ் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  நடைபெற்றது.

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மலரவனால், உருவாக்கப்பட்ட இத்திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தை தொடர்ந்து  யாழ் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் முதற்  கட்டமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தில் அங்குரார்பண நிகழ்வுடன் சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் எம்.மலரவன்  திட்டத்தின் நோக்கம் மற்றும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து விளக்கமளித்தார்.

இதனூடாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனையுடன், கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து கண் பிரச்சினைகள்  உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் வெண்புரை சத்திர சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களின் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்,  மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.