;
Athirady Tamil News

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் வருந்திக்கொண்டிருக்க முடியாது

0

யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் , யாழ்ப்பாண பொது நூலகத்தை பார்வையிட்ட பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு, மாவட்ட அபிவிருத்திச் சபை  தேர்தலுடன் இணைந்து, தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் கருப்பு ஜூலை தினமான இன்றைய தினம் நமக்கு நினைவுக்கு வருகிறது.
அன்று தீக்கிரையானது குறித்து கவிஞர்கள் எழுதியுள்ளனர்; நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, இதைப் பற்றி வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது.

எமது அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு  முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம், ஜனாதிபதி  யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கினார்.

இன்று , நாம் நூலகத்தைப் பார்வையிட்ட போது, 100 மில்லியன் ரூபாயில், திறம்பட பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூலகத்திற்குத் தேவையான தளபாடங்கள், டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான  கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு நவீன கேட்போர்கூடம் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் நுஃமான் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது குறித்து எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

“புத்தனைக் கொல்லுதல்” என்ற அந்த புகழ்பெற்ற கவிதை, இந்த நூலகத்திற்கு இழைக்கப்பட்ட அந்த கொடூரமான பேரழிவு குறித்தே எழுதப்பட்டது.
அதேபோல சோமிதரன் போன்ற இளம் திரைப்படப் படைப்பாளிகள் ஆவணப் படங்களை உருவாக்கியுள்ளனர்.

எமது அரசாங்கம் அமைக்கப்பட்ட ஒன்றரை ஆண்டிற்குள், காயமடைந்த இதயங்களைக் குணப்படுத்தவும், உடைந்த மனங்களைத் தேற்றவும் இந்த நூலகத்திற்காக ஒரு தொகையை ஒதுக்கியதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.