அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள்
அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள்
மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு – வேலணைத் தீவை இணைக்கும் வாணர் தாம்போதியில் வரலாற்றில் முதன்முறையாக ஒளியூட்டும் நோக்கில் 200 வோட்ஸ் சூரிய சக்தியுடைய ( சோலர் ) 40 மின்விளக்குகள் பொருத்தும் செயற்பாடு நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை நிறுவுனர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்கள் வழங்கிய ரூபாய் பத்து இலட்சம் நிதியுதவியில்
4 கிலோமீற்றர் நீளத்திற்கு காணப்படுகின்ற வாணர் தாம்போதியில் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
மிகவும் ஒடுங்கியதாகவும் போக்குவரத்திற்கு சிரமமாகவும் காணப்படுகின்ற குறித்த கடற்பாலத்தில் மிக நீண்டகாலமாக ஒளி விளக்குகள் பொருத்தப்படவேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தீவக சிவில் சமூகம் அமைப்பினரின் இடைவிடாத முயற்சியின் காரணமாக குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் திரு. கே. வி. தவராசா, தீவகம் சிவில் சமூகம் தலைவர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன், இந்து மத குருக்கள் முரளிதர சர்மா, வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன், தீவகம் சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன், புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளர் கிறிஸ்டின் ஐயாத்துரை, புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகத்தின் தலைவர் யே. சேயோன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வேலணைப் பிரதேச சபையினர் வழங்கியிருந்தனர்.
