;
Athirady Tamil News

நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் கொள்ளை

0

காத்மாண்டு,

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வங்கியின் பணப்பெட்டி ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்ததாக 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோகோசி ஆற்றுப் பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த வங்கி பெட்டகம், பல கிலோமீட்டர் தொலைவில் தாடிங் மாவட்டத்தில் திரிசூலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெட்டகத்தை கண்டெடுத்த சிலர் அதை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 29 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சுமார் நேபாள ரூபாய் 92.68 லட்சம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 லட்சம் பணம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் தாடிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் எந்த வங்கிக்கு சொந்தமானது என்பதையும், மேலும் யாருக்காவது இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க காதணியை திருடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.