;
Athirady Tamil News

நிந்தவூர் வவ்வாளோடை களப்பில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு: NAQDA உத்தியோகத்தர்களால் கள ஆய்வு!

0

நிந்தவூர் வவ்வாளோடை களப்பில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு: NAQDA உத்தியோகத்தர்களால் கள ஆய்வு!

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில், நேற்று (25) விசேட கள ஆய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எச். அம்ஜத் அலி அவர்களின் சபை முன்மொழிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும், பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அவர்களின் கோரிக்கையின் பேரிலும் இக் கள ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்கமைய, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் வவ்வாளோடை களப்பிற்கு நேரில் விஜயம் செய்து, அதன் தற்போதைய நிலைமை, நீர்வளம், சுற்றுச்சூழல் தன்மைகள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான பொருத்தப்பாடுகள் குறித்துத் தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும், எதிர்காலத்தில் இக் களப்பில் மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான வளர்ப்பு முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.இத் திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில், பிரதேசத்தின் இயற்கை நீர்வளத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதுடன், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நிந்தவூர் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கள ஆய்வின் போது பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், எச். அம்ஜத் அலி, கே.எம். ஜலீல், NAQDA அதிகாரிகள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.