;
Athirady Tamil News

கடற்கரைகளில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

0
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாகச் சட்டவிரோதமான முறையில் உரப்பைகளில் அடைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் மூலம் கடல்மண் கடத்தப்படும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

அதிகாலை வேளை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக இச் சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதிச் செய்தியாளர் பாறுக் ஷஹான் தெரிவிக்கின்றார்.

சோதனைகள் நிறுத்தப்பட்டதால் மேலெழும் கடத்தல்

ஆரம்ப காலகட்டங்களில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து பொலிஸாரும் கடற்படையினரும் தீவிர சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

எனினும், தற்சமயம் இத்தகைய சோதனைகளோ அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படுவதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் காரணமாகவே, தினமும் 20க்கும் மேற்பட்ட மண் மூடைகள் மோட்டார் சைக்கிள்கள் வாயிலாகக் கடற்கரையிலிருந்து கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இயற்கைச் சமநிலை பாதிப்பு

இக் கடல்மண் அகழ்வினால் கரையோரச் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைச் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரையோரம் பேணல் திணைக்களம், பொலிஸார் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இச் சட்டவிரோதக் கடத்தலைத் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடலில் கழிவுகள் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை

இதேவேளை, இரவோட இரவாக இல்லத்தரசிகள் சிலர் வீட்டுக்கழிவுகளைக் கொண்டுவந்து கடலில் கொட்டும் செயற்பாடுகளும் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் எமது கடல் மற்றும் கரையோர வளத்தைச் சீரழிக்கும் என்பதால், கரையோரப் பாதுகாப்பை உறுதிசெய்யச் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.