;
Athirady Tamil News

சபரகமுவ பல்கலையில் பகிடிவதையால் பறிபோன உயிர் ; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

0

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான மாணவரின் உயிரிழப்புக்கு, பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் காரணமாக இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, 11 மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க அதன் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மாணவருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

கடுமையான பகிடிவதை
இதன்படி, குறித்த மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக வளாகம், விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான எந்தவொரு இடத்திற்கும் துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சரித் திலீஷான் தனது வீட்டில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கடுமையான பகிடிவதை மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.