ஐயப்ப யாத்திரையின் கண்ணியம் காக்க புதிய சட்ட நடவடிக்கை: யாழ். ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்!
ஐயப்ப பக்தர்களின் யாத்திரை புனித யாத்திரையாக அறிவித்த பின்பு அது ஒரு கட்டுக்கோப்புக்குள் ஒரு முறையான நிறுவனமயமாக இயங்க வேண்டும். அதற்கான சில வரைபுகளை நாங்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்.
மிகவிரைவில் அதுவும் சட்டமாக்கப்பட்டு இந்த புனித யாத்திரையினுடைய கடப்பாடு, பெறுமதி, கண்ணியம் என்பன காக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், விசேடமாக யாழ்ப்பாணத்தில் ஐயப்ப இந்து மாநாடு நடைபெற்றது. இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட வருடத்திற்கு 30,000ற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இந்தியாவிற்குச் செல்கிறார்கள்.
ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அறிவிக்க வேண்டும் என
கடந்த 50 வருடங்களாக ஐயப்ப பக்தர்களுடைய கோரிக்கையாக இருந்தது. கடந்த 50 வருடங்களாக எந்த அரசாங்கமும் அந்த கோரிக்கையை ஏற்று அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பின்பு நாங்கள் கடந்த வருடம் 2025ம் ஆண்டு இந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக ஏற்றுக்கொண்டு அமைச்சரவையில் அங்கீகாரத்தைப் பெற்று தற்பொழுது வர்த்தமானி அறிவித்தலையும் நாங்கள் விட்டிருக்கிறோம்.
எனவே இதன் ஊடாக பல்வேறுபட்ட சலுகைகளை அந்த ஐயப்ப யாத்திரைகள் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அதாவது சலுகை அடிப்படையிலே விசாக்களையும் அதேபோல் அவர்கள் இந்தியாவில் சபரிமலைக்கு செல்லும்போது அந்த நடைமுறைகளை இலகுபடுத்துவதற்கும் இன்னல்கள் ஏற்படுகின்ற பொழுது அதை தேடி அறிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்தில் இருக்கிற அந்த இலங்கை தூதரகத்தினுடைய தற்காலிகக் கிளையை அங்கு நிறுவி அவர்களுடைய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அதேபோல கப்பல் சேவை, விமான டிக்கெட்டுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
அரசாங்கம் புனித யாத்திரையாக அறிவித்த பின்பு இது ஒரு கட்டுக்கோப்புக்குள் ஒரு முறையான நிறுவனமயமாக இயங்க வேண்டும். எனவே இதற்கான சில வரைபுகளை நாங்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்.
மிகவிரைவில் அதுவும் சட்டமாக்கப்பட்டு இந்த புனித யாத்திரையினுடைய அந்த கடப்பாடு, அதனுடைய பெறுமதி, அதனுடைய கண்ணியம் காக்கப்படும்.
உலகத்தில் எத்தனையோ நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள்
செல்கிறார்கள். எனவே எந்த நாடும் இதுவரைக்கும் அதை ஒரு புனித யாத்திரையாக அறிவிக்கவில்லை. உலகத்தில் முதல்முறையாக இந்த ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக ஏற்றுக்கொண்டு அறிவித்த ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை பெறுகிறது.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எல்லா மதங்களுக்கும் சமமாக தன்னுடைய சேவையை செய்கின்றது என்பதற்கான சான்றாக நான் இதை நினைக்கிறேன். இந்த ஐயப்ப யாத்திரை புனித யாத்திரை அறிவிக்கப்பட்டது ஒரு சிறப்பான செயல்பாடு என்று நான் நினைக்கிறேன் – என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி, அமைச்சரின் இணைப்பு செயலாளர் சுலக்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.